மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு டாக்டர் மற்றும் அவரது தாயாருக்கு 3 நாள் “ரிமாண்ட்”…!
திருச்சி மேலப்புதூர் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள் சிலர் விடுதியில் தங்கியும் உள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸி சகாயராணி என்பவர் இருந்து வருகிறார். இவரது மகன் சாம்சன். இவர், லால்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் . இவர் விடுதிக்கு அடிக்கடி வந்து வைத்தியம் பார்ப்பது போல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சாம்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயாரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்களை மூன்றாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி, வழக்கு பிரிவுகளில் சில மாற்றங்களை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், அவர்களை 3 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாம்சன் திருச்சி மத்திய சிறையிலும், அவரது தாயார் காந்தி மார்க்கெட் மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரசு டாக்டர் மற்றும் தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.