Rock Fort Times
Online News

ஆளுநருக்கு கண்டனம்: தமிழகம் முழுவதும் காங்கிரஸ்-த.வெ.க.ஆர்ப்பாட்டம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அதுவும் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை(118 உறுப்பினர்கள்) கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தையும் கொடுத்துள்ளது. மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழக பொறுப்பு ஆளுநரை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டும் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல, தஞ்சை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினரும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்