மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 293 தொகுதிகளில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் 80 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பாஜக-வுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 77 எம்எல்ஏக்களாக உயர்ந்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 9 மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

Comments are closed.