திருச்சியில் பரபரப்பு: தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்…!
திருச்சி, திருவானைக்காவல், மேலகொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரங்கா என்கிற ரங்கநாதன் ( 32). பிரபல ரவுடியான ரங்கா மீது ஸ்ரீரங்கம், லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை ஸ்ரீரங்கம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், ரங்கா தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவரின் தந்தை முத்துக்குமார் இறந்துவிட்டார். தந்தையின் இறுதிச்சடங்கு கொண்டையம் பேட்டையில் நடைபெற்றது. இதில், ரங்கநாதன் எப்படியும் கலந்து கொள்வார் என்று கணித்த ஸ்ரீரங்கம் போலீசார், சாதாரண உடையில் துப்பாக்கியுடன் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் எதிர்பார்த்தபடியே தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ரங்கநாதன் வந்தபோது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.