சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளர் மகனை ஷூவை கழற்றி அடிக்க பாய்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் “சஸ்பெண்ட்”…!
தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் உள்ளே புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்து விட்டு, மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவாராம். நேற்று முன்தினம் எஸ்எஸ்ஐ காவேரி சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்கவில்லை. மேலும், பணத்தை அடுத்த நாள் சாப்பிட வரும்போது தருவதாக கூறியுள்ளார். அதேபோல் நேற்று மாலை எஸ்எஸ்ஐ காவேரி உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர், முதல் நாள் அந்த எஸ்எஸ்ஐ சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த எஸ்எஸ்ஐ, முத்தமிழை தகாத வார்த்தையால் திட்டி சாப்பிட்ட உணவிற்கான பணத்தை தூக்கி வீசி எறிந்து மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ, தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி முத்தமிழை அடிக்க பாய்ந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் விசாரணை நடத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவேரியை பணி இடை நீக்கம்( சஸ்பெண்ட்)செய்து உத்தரவிட்டார்.
Comments are closed.