Rock Fort Times
Online News

ஶ்ரீரங்கம் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு பூத்தில் திமுக பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 6 மட்டுமே!- அதிர்ச்சி தகவல் !

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது ஸ்ரீரங்கம். 25 ஆண்டுகளாக அதிமுக கோட்டையாக இருந்த ஸ்ரீரங்கத்தை, 1996 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்ட தி.ப.மாயவன் மற்றும் எம்.பழனியாண்டி ஆகியோர் மீட்டெடுத்து வெற்றி பெற்றார்கள். ஆகவே இம்முறை ஸ்ரீரங்கத்தை தக்கவைக்கவும், ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்கவும் அக்கட்சி கடுமையாக முயற்சித்தது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டை நடத்திய த.வெ.க.தனது முதல் தேர்தலிலேயே இத்தொகுதியில் வெற்றியை நிலைநாட்டியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளிலெல்லாம் போட்டியிட்ட வேட்பாளர்கள் சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிக்கோட்டை தொட, ஸ்ரீரங்கத்திலோ சுமார் 33 ஆயிரத்து 660 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை, த.வெ.க தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. வாக்காளர்களை கண்காணித்து, அவர்களது ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் தங்களுக்கு சாதகமாக்க ஒவ்வொரு பூத் வாரியாக பி.எல்.ஏ மற்றும் பி.டி.ஏ, வார்டு கமிட்டி, பூத் கமிட்டி என மைக்ரோ லெவல் மேனேஜ்மெண்ட்டுகளை திமுக செய்திருந்த போதிலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டது எப்படி ? என கட்சி உடன்பிறப்புகளும், திமுக ஆதரவாளர்களும் குழம்பி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட 91வது பூத்தில் வெறும் 6 வாக்குகளை மட்டுமே திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூத்தில் மட்டும் பி.எல்.ஏ மற்றும் பி.டி.ஏ என இருவர், பூத் கமிட்டி 10 பேர், பூத் ஏஜென்ட் இரண்டுபேர். இதுஇல்லாமல் வட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் என இவ்வளவு நபர்கள் இருந்தும் 6 வாக்குகள் மட்டும் பதிவானது எப்படி?அப்படியானால் தலைமையை ஏமாற்றி கடமைக்காக மேற்ச்சொன்ன நபர்கள் நியமிக்கப்பட்டனரா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதுதொடர்பான விவாதங்கள் சோசியல் மீடியாவில் அனலை கக்குகிறது. மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிளைக்கழகம் என புறநகர் பகுதிகளிலும், மாநகரம், பகுதி, வட்டம் என நகரப்பகுதிகளிலும் கட்சிக்கட்டமைப்பை வலுவாக வைத்திருந்த போதிலும்,கட்சி நிர்வாகிளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாததும், இளைய தலைமுறை வாக்காளர்களை தங்கள் பக்கம் கவர முயற்சிக்காததும், ஒருவருக்கொருவர் உள்ளடி வேலைகளில் இறங்கியதும் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவை அதள பாதாளத்தில் தள்ளியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்