Rock Fort Times
Online News

த.வெ.க.வுக்கு வி.சி.க. ஆதரவு: முதல்வர் ஆகிறார் விஜய்… தொண்டர்கள் கொண்டாட்டம்..!

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் 118 உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சர் ஆகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அதுவும் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இருந்தாலும் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சி தலைவர்களிடம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆதரவு கோரினர். இதன் பயனாக 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், 2 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2 உறுப்பினர்கள் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம் த.வெ.க. பலம் 116 ஆக அதிகரித்தது. அந்த உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் தமிழக ஆளுநர் அர்லேகரை நேற்றைய தினம் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், பெரும்பான்மை பலத்துடன் வந்தால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், 2 உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தமிழக வெற்றி கழகம் கோரியது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவனோ தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசத்து தனது முடிவை இன்று(மே 9) தெரிவிப்பதாக கூறினார். அதன்படி, இன்று சுமார் 4.30 மணி அளவில் விசிக தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதற்கான ஆதரவு கடிதத்தை திருமாவளவனிடமிருந்து ஆதவ் அர்ஜுனா பெற்றுக் கொண்டார். இதன் மூலம் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்ததால் த.வெ.க.தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்ததால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்