இன்றைய காலகட்டத்தில் அறிவில், கல்வியில் சிறந்து விளங்கும் பல இளைஞர்கள், இளம் பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
அந்தவகையில் திருச்சியைச் சேர்ந்த 23 வயதே ஆகும் வக்கீல் ஒருவர் நீதிபதியாக உள்ளார். திருச்சி மாவட்டம் குண்டூர் பஞ்சாயத்து அயன்புத்தூர் தான் இவரது சொந்த கிராமம். மாமுண்டி-விஜயா தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் பாலமுருகன். இவருக்கு பிரதீப் என்கிற ஒரு அண்ணனும், பிரியங்கா என்கிற சகோதரியும் உள்ளனர். சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. தாய், தந்தை இருவரும் விவசாயம் பார்த்து வருகின்றனர். பாலமுருகன், தனது ஆரம்பக் கல்வியை செம்பட்டு ஆபட் மார்சல் பள்ளியில் முடித்தார். மேல்நிலை கல்வியை திருச்சி ஜங்ஷன் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவோடு திருச்சி காஜாமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் திறம்பட சட்டம் பயின்றார். அதனைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தனது பெயரை பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ணபாரதி மற்றும் வழக்கறிஞர் சாகர் ஆகியோரிடம் ஜூனியர் வழக்கறிஞராக 6 மாத காலம் பயிற்சி பெற்றார். பின்னர் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வு எழுதினார். இதில், அவர் தமிழ்நாடு அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றார். பயிற்சி காலத்திற்குப் பின்னர் அவர் நீதிபதியாக உள்ளார். இதுகுறித்து பால முருகனிடம் கேட்டபோது, தான் 6வது படிக்கும் போதே வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவை மனதில் விதைத்து கொண்டதாகவும், தற்போது அந்த கனவு நனவாகி உள்ளதாகவும், பயிற்சிக்குப் பிறகு நீதிபதியானதும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க பாடுபடுவேன் என்று கூறினார். இதுகுறித்து வழக்கறிஞர் மணிவண்ணபாரதி கூறுகையில், பாலமுருகன் நன்றாக படிக்கக் கூடியவர். இவருடன் சேர்ந்து தேர்வு எழுதிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 பேர் நீதிபதியாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த, நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.