நான் பேசியதை சிலர் திரித்து கூறுகின்றனர்: திமுக தலைமையிலான கூட்டணி மிகச்சரியான கூட்டணி- அமைச்சர் கே.என்.நேரு…!
சுதந்திர போராட்ட தியாகி.வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு தி.மு.க.முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு, வெள்ளாளர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் ஹரிஹரூன், சோழிய வெள்ளாளர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், தி.மு.க.தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் பேசியதை சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் தற்போதைய கூட்டணியை, எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சியமைத்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார். அதைப்போல, இந்த ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்றுதான் பேசினேன். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமூகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.