திருச்சியில் 7 வாகனங்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் படுகாயம்: பதை, பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!
தஞ்சை மாவட்டத்திலிருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று திருச்சி வழியாக தேனி மாவட்டத்திற்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி, திருவெறும்பூர் காட்டூர் கடைவீதி பகுதியில் லாரி வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதி விபத்து பகுதி என்பதால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து காவல் துறை சார்பில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனங்களில் வந்தவர்கள் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி சிறிது தூரம் சென்று நின்றது. உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 வாகனங்கள் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Comments are closed.