தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கி வேகமாக இருக்கைகள் நிரம்பி வருகின்றன. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், “ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை யொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 3 நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 5.66 லட்சம் பேர் பயணித்திருந்தனர். அரசு பேருந்துகளை பொறுத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் அக்டோபர் 31-ம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்களைப் பொறுத்தவரை முன்பதிவு தொடங்கியுள்ள பேருந்துகளின் இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அக்டோபர் 29-ம் தேதி பயணிக்க தமிழகம் முழுவதும் 9,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையில் இருந்து பயணிக்க 7,200-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 30-ம் தேதியும் மாநிலம் முழுவதும் 7,900-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மட்டும் 5,900-க்கும் மேற்பட்ட இருக்கைகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளன. இதன்படி, கணக்கில் கொண்டால் சுமார் 130-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் இருக்கைகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
Comments are closed.