வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் புகுந்து பெண் ஊழியரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை… திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி திருவெறும்பூர் அண்ணா நகரில் வட்டாரப் போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 09-08-2022 அன்று திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறையைச் சேர்ந்த சுதா (35), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (51) (கண்காணிப்பாளர்) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர். அன்று அலுவலக விடுமுறை தினம் என்றாலும், நிலுவையிலுள்ள பணிகளை முடிப்பதற்காக அலுவலகம் வந்து கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலக அறையின் மூலையில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சுதாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து சுதா மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில், நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராத் பகுதியை சேர்ந்த லேடன்தாஸ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் பார்ப்பதற்கு வீடு போன்று தோன்றியதால், உள்ளே சென்று திருடலாம் என்று நினைத்து உள்ளே சென்றதாகவும், அப்போது சுதா கூச்சலிட்டதால் அவரை தாக்கியதாகவும் ஒப்புக்கொண்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று(23-01-2024) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பெண் ஊழியரை தாக்கிய லேடன்தாசுக்கு இரு பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆண்டு மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஹேமந்த் ஆஜரானார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.