திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் – ஒரே நாளில் 3 பேர் கைது !
பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர், திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, மலேசியா செல்லும் மலிண்டோ விமானம் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்ல காத்திருந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை இமிகிரேசன் அலுவலர்கள் பரிசோதித்து பார்த்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த ஜெ. சுப்ரியாபேகம் (34) என்பவர், தனது பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து போலியான முத்திரை பதித்து பயணிக்க முயன்றது தெரியவந்தது.
அதேபோல, சிங்கப்பூர் செல்ல காத்திருந்த ஸ்கூட் விமான பயணிகளின் பயண ஆவணங்களை பரிசோதித்ததில் , புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த ரா.அய்யப்பன் (45) என்பவர், தனது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவைகளை போலி ஆவணங்கள் மூலம் சு. சேகர்,சிவகங்கை என மாற்றி பாஸ்போர்ட் எடுத்திருந்து பயணிக்க முயன்றது தெரியவந்தது. இதேபோல், இலங்கை செல்ல காத்திருந்த பயணிகளின் ஆவணங்களை சோதித்தபோது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள அங்காளம்பட்டியைச் சேர்ந்த யோகலட்சுமி (34) என்பவர் பாஷ்போர்ட்டில் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது. இலங்கை குடியுரிமை பெற்ற அவர் கடந்த 2013 ஆவது ஆண்டு மதுரை வழியாக தமிழகம் வந்து, திருமணம் செய்துள்ளார். பின்னர் போலி ஆவணங்கள் மூலம் 2016 ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் எடுத்து, அதன் மூலம் பயணிக்க இருந்தது தெரியவந்தது.
இது குறித்து இமிகிரேஷன் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.
Comments are closed.