திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே தண்ணீர் தட்டுப்பாடு ! காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் !
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில்,தண்ணீர் வினியோகம் சரியாக செய்யப்படாததால் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலத்துடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லாங்குத்து பகுதிக்கு, குழாய்கள் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் குழாய்களை மேம்படுத்தும் பணிக்காக, பள்ளம் தோண்டியபோது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதுக்கப்பட்டு இருந்த குழாய்களை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், அப்பகுதி பொதுமக்களுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், இன்று காலை காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த உப்பிலியபுரம் போலீசார், மற்றும் ஆலத்துடையான்பட்டி ஊராட்சி தலைவர் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Comments are closed.