சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர், ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-
தென்னக ரயில்வே கடந்த நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் 11,000 கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. அதேபோல சரக்குகளை கையாளும் விதத்தில் 24 சதவீதம் கூடுதலாக கையாண்டுள்ளோம். ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 2024-ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும். இதில் 21 முக்கிய ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது.
ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான உடைமைகளை திருடிய 634 நபர்களையும், பயணிகளின் உடைமைகளை திருடிய 300 நபர்களையும், வெடி பொருட்கள், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள், ஹவாலா பணம் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 300 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ரயில் பயணத்தின் போது வழி தவறிய 2,205 குழந்தைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ரயில் பயணத்தின் போது விபத்தில் சிக்கிய 64 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி உள்ளனர். ரயில் பயணிகள் தவறவிட்ட உடைமைகள் குறித்து 4,470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயணத்தின்போது பயணிகளை தொந்தரவு செய்த 416 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய மீனா, தமயந்தி, சிவக்குமார், ஸ்ருதிராஜ் ஆகியோரை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக வெடிபொருள்களை கண்டறிவது உள்ளிட்ட புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும் மேக்ஸ், டான், ராக்கி என்ற 3 மோப்பநாய்கள் தங்களது திறமையை மைதானத்தில் வெளிப்படுத்தியது. தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து பார்வையாளர்களை கவர்ந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை பெண் வீராங்கனைகள் அதிநவீன துப்பாக்கிகளை கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம், வணிக மேலாளர் செந்தில்குமார் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள், ஆர்.பி.எப்.போலீசார், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.