தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிலர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் காலியாகும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தநிலையில் காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்தக்கூடாது என அதிமுக எம்பி இன்பத்துரை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 6 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து உள்ளார்கள். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாக உள்ளது. இதனால் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க தவெக குதிரை பேரம் செய்து வருகிறது. ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். குதிரை பேரம் குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.