திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் திருச்சி சிவா. கழகத்தின் கொள்கை பீரங்கியாக முழங்கி வரும் இவருக்கு, சூர்யா என்ற மகனும், காயத்திரி, டாக்டர் பத்மப்ரியா என்று இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகள் காயத்திரியின் கணவரான கராத்தே முத்துக்குமார், திருச்சியில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். அனைவரிடமும் இயல்பாக பழகும் குணமுடைய கராத்தே முத்துக்குமார்,

எல்லோருடைய சுக, துக்கங்களிலும் தவறாமல் கலந்து கொள்வார். இவரது யதார்த்தமான குணத்திற்கு அனைத்து தரப்பினரிடையே நன் மதிப்பு இருந்து வருகிறது. திருச்சி சிவாவின் மூத்த மகளான காயத்திரி, தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று(ஜூலை 1) அதிகாரப்பூர்வமாக த.வெ.கவில் தன்னை இணைத்துக் கொண்டதற்கான கழக உறுப்பினர் அட்டை வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது., ” திருச்சி சிவாவின் மூத்த மகள் காயத்திரி இப்போதுதான் த.வெ.க.வில் இணைந்தது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு. சிறுவயதிலிருந்தே காயத்திரி, நடிகர் விஜயின் அதிதீவிர ரசிகை. அதனால் விஜய் கட்சி ஆரம்பித்தபோதே தன்னை த.வெ.கவில் இணைத்துக் கொண்டார். பொது வெளியில் இவ்விஷயத்தை பகிராததால் யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது தீவிர அரசியலில் களம் காண விரும்பும் இவர், விரைவில் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்துபெற திட்டமிட்டிருக்கிறார். காயத்திரி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தாலும்,இவரது கணவரான கராத்தே முத்துக்குமார் எப்போதும் போல திமுகவில் தொடர்வார். எந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றலாம். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அந்த வகையில் காயத்திரியின் அரசியல் முடிவு அவருக்கானது” என்றனர்.

Comments are closed.