நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று( ஜூலை 2) பிற்பகலில் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கல்லிடைக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது. காளிமுத்துவின் இருசக்கர வாகனம் மீது ஒரு கும்பல் காரை கொண்டு மோதியது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மூவரையும் அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்ய முற்பட்டது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மூவரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த கும்பல் விரட்டிச் சென்று காளிமுத்துவையும், அவரது 5 வயது இளைய மகனையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. அத்துடன், காளிமுத்துவின் தலையை துண்டித்து மாநில நெடுஞ்சாலையில் நடுப்பகுதியில் வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காளிமுத்துவின் மூத்த மகன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடு ரோட்டில் இரட்டை கொலை நடந்த சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அத்துடன், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொளையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவம் கல்லிடைக்குறிச்சி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.