நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று ( 25.08.2023 ) நடைபெற்றது. மேலும், இன்று மாலை ‘வென்றாக வேண்டும் தமிழ்’ என்ற தலைப்பில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக மாநாடு அக்கட்சியினரை உற்சாகப்படுத்தவும், கட்சி எடப்பாடி பக்கம் வந்து விட்டது என்பதை காட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டுள்ளது. மாநாடு வேறு எந்த மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை.
தமிழர்களிடம், ‘புரட்சி’ என்கின்ற சொல் மிகவும் கேவலப்பட்டு விட்டது. எடப்பாடிக்கு பட்டம் கொடுத்திருக்கிறார்கள். நாமும் அவரை வாழ்த்துவோம். பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் கொள்கையோடு ஒத்துப் போகிறோம் என்று யாராவது வரட்டும். அப்பொழுது கூட்டணி பற்றி பேசி முடிவெடுப்போம்.
கொடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக 6 கொலைகள் நடந்துள்ளன. அதனை ஏன் இன்னும் கண்டுபிடித்து வெளியே கொண்டு வரவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை கர்நாடகாக்காரன் என்று பெருமையோடு பேசியுள்ளார். அவர் அந்த மாநிலத்திற்கு தலைவராக போகட்டும். நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது.
மருத்துவம் தான் கல்வி என்று மாணவர்களின் மனதில் பதிய வைப்பது தவறு. கல்வியில் மருத்துவமும் ஒன்று என மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மருத்துவம் படித்த தமிழர்கள் உலகம் முழுவதும் மருத்துவத் துறையில் மேதைகளாக உள்ளனர். அவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதாமல் வந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.