Rock Fort Times
Online News

திருச்சி, விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு…!

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4 பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட 61 மற்றும் 65- வது வார்டுகளில் அமைந்துள்ளது, வயர்லெஸ் சாலை. திருச்சி விமான நிலையத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் இந்த சாலை அதிகளவில் வாகனப் போக்குவரத்து நடைபெறும் பிரதான சாலையாகும். இச்சாலையின் அடியில் ஒரு புறம் கழிவு நீர் குழாய்கள் மற்றும் ஆள்நுழை (மேன்ஹோல்) தொட்டிகள் அமைக்கப்பட்டும், மறுபுறத்தில் குடிநீர் பிரதான குழாய்களும் புதைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் புதை வடிகால் திட்டப்பணிகள் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் சுமார் 3 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளன. என்றாலும் இன்னும் வீடுகளிலிருந்து புதைவடிகால் திட்டக் குழாய்களுக்கான இணைப்புகள் வழங்கப்படவில்லை. இணைப்புகளை வழங்க மேலும் 6 மாத காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.  இதன் காரணமாக இப்பகுதியில் குறிப்பாக வயர்லெஸ் சாலையில், புதைவடிகால் திட்டப்பணிகளின்போது குடிநீர் பிரதான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. ஒரு வழியாக வயர்லெஸ் சாலையில் மட்டும் சுமார் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் அண்மையில்தான் முடிவுக்கு வந்தன. அதன் பின்னரே வயர்லெஸ் சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு மையத்தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அண்மைக்காலமாக புதைவடிகால் திட்ட ஆள் நுழை தொட்டிகளில் அடிக்கடி கழிவு நீர் நிரம்பி அதன் வழியாக வழிந்தோடுவது வாடிக்கையாகி விட்டது. ஆங்காங்கே சிறிய அளவில் ஏற்பட்டு வந்த பாதிப்பு கடந்த 10  நாட்களாக மிகப்பெரிய அளவில் கழிவு நீர் நிரம்பி நாள் முழுவதும் சாலையில் தொடர்ந்து வழிந்தோடுவதை காணமுடிகிறது.  குறிப்பாக வயர்லெஸ் சாலையில், ஒருபுறம் சர்ச், மறுபுறம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில், இரு மேன்ஹோல் தொட்டிகள் நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பக்கவாட்டில் உள்ள சிறு சாலைகளிலும் வழிந்தோடி குடியிருப்பு பகுதிகளிலும் கழிவு நீர் ஓடுகிறது. இவற்றை சரி செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியது. முதல் கட்டமாக நிரம்பியுள்ள கழிவு நீரை மோட்டார் வைத்து வெளியேற்றி, அதன் பின்னர் எங்கிருந்து கழிவு நீர் அதிகளவில் வருகிறது எனக் கண்டறிந்து அவற்றை சரி செய்தனர். ஆனாலும் கழிவு நீர் குறைந்தபாடில்லை. பின்னர்தான் தெரிந்தது, அவை மழை நீருடன் சேர்ந்து வருவது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து  மாநகராட்சி  அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் புதை வடிகால் திட்டப்பணிகளுக்கென ஆள்நுழை தொட்டிகள் (மேன்ஹோல்) அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மழை நீர் தேங்கும் பகுதிகளிலிருந்து மழை நீரை திறந்து விட்டுள்ளனர். அதனால்தான் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து அதிகளவில் வெறியேறி வருகின்றன. எந்தப் பகுதியிலிருந்து மழை நீர் திறந்து விடப்படுகின்றன என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றனர்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்