வியாபார குழு தேர்தலை நடத்த எதிர்ப்பு- திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்…!
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று(4-11-2024) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருச்சி அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அஷ்ரப் அலி, துணைச் செயலாளர் அன்சார்தின், இணைச் செயலாளர் இந்திரா, துணைத் தலைவர் சிவா, தலைவர் செல்வி உள்ளிட்ட பலர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாலையோர வியாபாரிகளை மாநகராட்சி நிர்வாகம் தனியார் மூலமாக கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை வெளியிட்டு வியாபார குழு தேர்தலை நடத்த உள்ளனர். அந்த கணக்கெடுப்பில் வியாபாரம் செய்யாத நபர்களின் பெயர்களும், ஆட்டோ ஓட்டுபவர்கள் பெயர்களும், சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் மற்றும் தையல் தொழிலாளர்களின் பெயர்களும், ஆண் பெயருக்கு பெண் புகைப்படமும் என பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மேலும், சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி போன்ற நகராட்சி பகுதிகளில் உள்ள வியாபாரிகளின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மாநகராட்சியில் வியாபார குழு தேர்தல் நடக்கும் நிலையில் நகராட்சியில் இருக்கும் வியாபாரிகளின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இந்தத் தேர்தல் முறையாக நடைபெற வாய்ப்பு இல்லை. கணக்கெடுப்பில் உள்ள வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை இல்லாமல் எப்படி வியாபார குழு தேர்தல் நடத்த முடியும். ஆகவே வியாபார குழு தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. முன்னதாக ஏஐடியுசி, சிஐடியு, மனிதநேய வர்த்தக நல சங்கம், புஜாதொமு உள்ளிட்ட பல்வேறு வியாபார சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற வியாபாரிகள் மாநகராட்சி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
Comments are closed.