தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று(ஏப்.29) வெளியாகின. இதில், பெரும்பாலான கருத்து கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திமுக திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இதன் மூலம் தமிழக மக்களையும், அதிமுக தொண்டர்களையும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்க முயற்சி நடைபெறுகிறது. இத்தகைய கருத்துக் கணிப்புகளை கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலுடன் பல தேர்தல்களில் எதிர்மறை கருத்துக் கணிப்புகளை முறியடித்து வெற்றி பெற்ற வரலாறு கொண்டது. குறிப்பாக 2011 மற்றும் 2016 தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டு அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலிலும் அதிமுக 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக தோல்வியை உணர்ந்துள்ளதால், பொய்யான வெற்றி பிம்பத்தை உருவாக்கி வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக்கூடும். மே 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள், பூத் ஏஜெண்ட்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மக்கள் விரோதமான திமுக ஆட்சி தமிழகத்தில் அமையாது. மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். இவ்வாறு
அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.