தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியை அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி காலை 8 மணிக்கு
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் சுற்று முடிவுகள் காலை 9 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்கூட்டியே சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான மேஜைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பெரிய தொகுதிகளில் கூடுதல் மேஜைகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அதிகாரி வீதம்
234 தொகுதிகளுக்கும் வெளிமாநிலத்தை சேர்ந்த 234 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இந்த பார்வையாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இறுதி முடிவுகளும் அவர்களின் கையொப்பத்திற்குப் பிறகே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்யூ ஆர் கோடு அடையாள அட்டை அவசியம்:
வாக்கு எண்ணிக்கையை சரிபார்க்க வரும் கட்சி முகவர்கள் 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். முதல் 2 இடங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சரிபார்க்கப்படும். 3வது இடத்தில் க்யூ ஆர் கோடு ஸ்கேனிங் மூலம் அடையாள அட்டை சரி பார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.