சிவகங்கை அருகே நாட்டார்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (70). அதிமுக கிளைச் செயலாளரான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இன்று (4-11-2024) காலை கடையை திறக்கச் சென்ற அவரை, ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கொலை செய்த அதே நபர், முன்னதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரையும் வெட்டினார். ஆனால் அவர் தப்பியோடியதால் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் மற்றும் திருப்பாச்சேத்தி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை பகுதியில தீபாவளியில் இருந்து இதுவரை தொடர்ந்து 3 கொலைகள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Comments are closed.