மதுராந்தகம் அருகே துயர சம்பவம்: லாரி மோதியதில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 4 கல்லூரி மாணவர்கள் பலி…!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை–திருச்சி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று பஸ்ஸை உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்ற மோனிஷ், கமலேஷ், தனுஷ் உள்ளிட்ட 3 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வந்த ரஞ்சித் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக பஸ் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மேல் மருவத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மாணவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளக்கூடாது என அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது என்று பயணி ஒருவர் ஆதங்கப்பட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.