Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘கண்ணாடி கூரை’ கொண்ட ரயில் பெட்டி உருவாக்கம்… * இயற்கையை பயணிகள் கண்டு ரசிக்க ரயில்வே புதிய முயற்சி..!

சென்னை, பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 2017 -ம் ஆண்டு முதல் கண்ணாடிக் கூரை கொண்ட ‘ விஸ்டாடோம்’ பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் அக். 22 முதல் ஜன.15 வரை சோதனை அடிப்படையில் இந்த பெட்டிகள் பயன்பாட்டுக்கு
வர உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது; அழகிய மலைப் பகுதிகள் , அருவிகள் போன்ற இயற்கை அழகை பயணிகள் முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் விஸ்டாடோம் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் பெரிய கண்ணாடி ஜன்னல்களோடு, சுழலும் இருக்கைகள் இருப்பதால் 360 டிகிரி கோணத்தில் இயற்கையை ரசிக்க முடியும். ரூ.4 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில், 44 இருக்கைகள் மட்டுமே இருக்கும். Wi-Fi, GPS உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளது. தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் ( 16327 ) அக்.22 முதல் ஜன.15 வரை விஸ்டாடோம் பெட்டி பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது.

மதுரையில் இருந்து புறப்படும் ரயிலில் அக்.22 முதல் ஜன.15 வரை வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இணைக்கப்படும். குருவாயூரில் இருந்து புறப்படும் ரயிலில் அக்.23 முதல் ஜன.16 வரை வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் இணைக்கப்படும். தமிழகம் – கேரளா எல்லையான செங்கோட்டை – புனலூர் மலைப்பாதை, ஆரியங்காவு கணவாய் வழியாகச் செல்லும் போது , மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம். இந்தப் பெட்டியில் பயணிப்பதற்கு அடிப்படைக் கட்டணம் ரூ.515 -ம், மதுரை – குருவாயூர் முழுமையாகப் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணம் ரூ.1,875 ஆகும் ” இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்