சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் ராட்சத மதில் சுவர் அமைத்து அதில் மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் நேபாளம் நாட்டை சேர்ந்த சுதீப் (வயது 23) என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சென்னையில் தங்கி இருந்து திருட்டில் ஈடுபட்டபோது கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் உணவு சாப்பிடுவதற்கு வரவில்லை. அவரை அறையில் தேடி பார்த்த போதும் காணவில்லை. இதை பார்த்து சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரையும் காணவில்லை.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து தப்பி ஓடிய 2 கைதிகளை தேடி வருகின்றனர். புழல் சிறையில் அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் புழல் சிறையில் இருந்து தப்பிய இருவரில் நேபாளத்தை சேர்ந்த கைதி சுதீப்பை இன்று போலீசார் கைது செய்தனர். மற்றொரு கைதியான சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பிய விவகாரத்தில் உதவி ஜெயிலர் மற்றும் 6 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Comments are closed.