ஒரு கட்சியை ஏ டீம், பி டீம் என்று பேசுவது சரியல்ல : விஜய் கட்சியின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்- திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி…!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடியது. அந்த கூட்டத்தில் மாதம்தோறும் தமிழகத்திற்கு முறையாக, தவறாமல் கொடுக்கக்கூடிய தண்ணீரை கர்நாடகா அரசு கொடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளது. இதனை கர்நாடக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக விவசாயிகளுக்கு பயிர் பிரச்சனை என்பது உயிர் பிரச்சனையாக இருக்கிறது. இந்த மாதம் இறுதி வரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 13.8 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். தமிழக அரசு இதனை பெற்றுத்தர கவனம் செலுத்த வேண்டும். திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆறுகளை தூர்வார வேண்டும். இதில் காணப்படும் ஆக்கிரமிப்புகளையும், கருவேல மரங்களையும் அகற்றி, தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் வாழும் இடங்களுக்கு அருகிலேயே விதை நெல் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
இதனால் ஏழை, எளிய நடுத்தர விவசாயிகளுக்கு அலைச்சல், கால விரையம் மற்றும் வண்டி வாடகை மிச்சமாகும். அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அரசியல் கட்சி பாகுபாடு இல்லாமல், பதிவு மூப்பு அடிப்படையில் மானிய விலையில் வழங்க வேண்டும். இவற்றை அரசியல் கட்சி பரிந்துரையின் பேரில் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். நடிகர் விஜய் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது கொள்கை, கோட்பாடுகள் எல்லாம் மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக வகுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியை ஏ டீம், பி டீம் என்ற பேசுவது தேவையற்றது. அவருடைய அரசியல் செயல்பாடுகள், மக்கள் பணிகள் இவற்றையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட புதிய காய்ச்சல் எதுவும் இல்லாத வகையில் மக்களை பாதுகாக்க சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர்கள் குணா, இன்டர்நெட் ரவி, கே.டி தனபால்,கே.வி. ஜி ரவீந்திரன், நிர்வாகிகள் தர்மராஜ், ராஜு, தனசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.