திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை காரில் கடத்தி வந்த நபர் அந்த சிறுமிக்கு வாயில் மதுவை ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பொதுமக்களால் தாக்கப்பட்ட அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அந்த சிறுமியை பலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சில ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்த திருச்சி மாநகர காவல் துறையினர் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது சம்மந்தமாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக தகவல் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான தகவலாகும்.
திருச்சி மாநகரம், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி தனது திருநங்கையான சகோதரனை பார்ப்பதற்காக அவர் மற்ற திருநங்கைகளுடன் வசித்து வரும் கல்மந்தை காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று (03.06.2026) மதியம் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த பாக்யா என்ற திருநங்கையை காரில் அழைத்து வந்த சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த
கார் ஓட்டுனரான மாரிசெல்வன்( 43) என்பவரும் அந்த வீட்டில் இருந்துள்ளார். மேற்படி, கல்மந்தை காலனி வீட்டில் இருந்த மாரிசெல்வன் அங்கிருந்த 16 வயது சிறுமியை மாலை 5 மணிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு மாலை 6-30 மணியளவில் கீரைக்கடை பஜாரில் சிறுமி போதையில் சுய நினைவில்லாமல் கீழே விழுந்து கிடப்பதாக தகவலறிந்து அவரது சகோதரி சிறுமியை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மாரிசெல்வன், சிறுமியை காரில் அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்து, பின்னர் அவர் மயங்கியதாகவும், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து பின்னர் கீரைக்கடை பஜாரில் விட்டு சென்றதாகவும், கார் ஓட்டுநர் மாரிசெல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், மாரி செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மேற்படி சம்பவத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் எதுவும் நடைபெறவில்லை என்றும், ஒரே எதிரி மாரிசெல்வம் மட்டும் பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Comments are closed.