Rock Fort Times
Online News

பெண்ணை இழிவாகப் பேசி அவதூறு பரப்பிய பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா கைது…!

யூடியூப் சேனலில் பெண்ணை இழிவுப்படுத்தி காணொளி வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில் திருச்சி சூர்யா சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராக இருப்பவர் அலிசா அப்துல்லா. இவர், நாட்டின் முதல் பெண் மோட்டார் பந்தய சாம்பியனும் ஆவார்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை நேற்று(03-06-2026) நேரில் சந்தித்த அலிசா அப்துல்லா, தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா வெளியிடுவதாக புகார் அளித்தார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான விடியோவில் என்னையும், என் குழந்தைகளையும் அவதூறாக விமர்சித்து இருவரும் பதிவிட்டிருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், திருச்சி சூர்யாவை கைது செய்தனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவின் சைபர் குற்ற காவல் நிலையத்தின் சமூக ஊடக விசாரணைப் பிரிவு, பெண் ஒருவரின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச மற்றும் பாலியல் ரீதியான கருத்துகளை இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளது.

சென்னை மாநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் இது குறித்து நேற்று புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில், அவரையும் அவரது புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளையும் குறித்து ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவு சைபர் குற்ற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றச்சாட்டில் தொடர்புடைய திருச்சி சூர்யா (33) இன்று (04.06.2026) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சூர்யா, சைதாப்பேட்டை, பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சூர்யா திருச்சி திமுக எம்பி சிவாவின் மகன் மற்றும் பாஜக முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்