Rock Fort Times
Online News

புதிய இயக்கம் தொடங்கினார், அண்ணாமலை… * உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது ஆக்டிவான கட்சிப் பணிகளை பார்த்து அவருக்கு பாஜக தமிழ் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவரது அயராத உழைப்பின் காரணமாக தமிழகத்தில் பாஜக 12 சதவீத வாக்குகளை பெற்றது. பின்னர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக தலைவர் பதவி பறிக்கப்பட்டு நைனார் நாகேந்திரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணாமலைக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இதனால் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி, புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் பரவின. அதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்ணாமலை டெல்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிட தலைவர்களிடம் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதம் இன்று (ஜூன் 5) ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் மனம் திறக்கப் போவதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் 2020, ஆகஸ்ட் 25-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன. நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும். ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன். இது தமிழர் பண்பு என்றும்கூட வைத்துக் கொள்ளலாம்.

ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. என்னுடைய பாதையும்கூட 2009ல் விஜயகாந்த்தின் தேமுதிகவில் மூன்று மாத காலம் இருந்து பயிற்சி பெற்று, பின்னர் 10 ஆண்டு காலம் கழித்து பாஜகவில் இணைந்து அங்கு 6 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில், தற்போது தனித்துவமான முறையில் நம்முடைய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

இது நம்ம இயக்கம்,

பின்னர் அவர் இது நம்ம இயக்கம் என்ற அமைப்பின் இணைப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதில் தற்போது வரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

தேர்தலில் போட்டி உறுதி,

தற்போது தொடங்கியுள்ள இயக்கத்தில் நிறைய பேரை சேர்க்க வேண்டும். இந்த இயக்கம் கட்சியாக மாறும். வரும் பொதுத் தேர்தலில் இந்த கட்சி கண்டிப்பாக போட்டியிடும். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்