சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல, இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழா பூச்சொரிதலுடன் இன்று(10-03-2024) காலை தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்தலத்தில் தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் நீங்கவும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதம் இருப்பார்.
இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பூச்சொரிதல் விழாவை ஒட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் முடிந்து மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுகளுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முதல் வார பூச்சொரிதல் விழாவான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் தக்கார் மற்றும் இணை ஆணையர் பிரகாஷ், இணை ஆணையர் கல்யாணி, கோவில் , மணியக்காரர் பழனிவேல், பேரூராட்சி தலைவர் ஜி.பி.சரவணன் ஆகியோர் தட்டுக்களில் பூக்களை ஏந்தி தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். அதேபோல, பல்வேறு அமைப்பினர் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் பூந்தட்டுக்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இன்னும் பக்தர்கள் சாரை, சாரையாக பூத்தட்டுகளுடன் வந்த வண்ணம் உள்ளனர். இதனால்,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பூச்சொரிதல் விழாவை ஒட்டி சமயபுரம் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் என 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியதை ஒட்டி 10-ந் தேதி, 17, 24, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்)7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.