போதைப்பொருள் ‘கடத்தல் கிங்’ ஜாபர் சாதிக்கிடம் 7 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி-முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள்?…
டெல்லியில் உள்ள ஒரு குடோனில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில்
போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்தது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரை டெல்லி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று(09-03-2024) ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதும், இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம், தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து தீவிர விசாராணை மேற்கொள்ளப்படும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர்சிங் தெரிவித்துள்ளார். பின்னர் ஜாபர் சாதிக்கை டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, ஜாபர் சாதிக்கிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.சி.பி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த 7 நாட்களும் அவரிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
Comments are closed, but trackbacks and pingbacks are open.