திருவெறும்பூர் எழில் நகர் பகுதியில் அமைய உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி பூமி பூஜை போடப்பட்டது. இந்நிலையில் அங்கு அமைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் 8 ஊர்களை சேர்ந்த குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர், ஏரி, குளம், காற்று மற்றும் சுற்றுப்புற சூழல்கள் மாசடையும். மேலும், நோய்களை பரப்பும் ஈக்களும், கொசுக்களும், குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து வீடுவீடாக எழில் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.