சக்சஸ் ஃபார்முலாவை கையில் எடுக்கும் நடிகர் விஜய்- திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு?…
தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத நடிகராக விளங்கி வருபவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. 50 வயதாகும் விஜய் திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும், கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் அறிக்கை வாயிலாக விஜய் தெரிவித்திருந்தார். இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரை கட்சியில் புதிய உறுப்பினர்களாக 80 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க வெங்கட்பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்றும், அதன்பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை எங்கு நடத்தலாம் என புஸ்ஸி
ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் அதற்கான இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் இடத்தை பார்த்த நிலையில், திருச்சி சிறுகனூர் பகுதியிலும் இடம் பார்க்கப்பட்டது. தற்போது திருச்சி ஜி கார்னர் மைதானத்தை பார்வையிட்டு உள்ளனர். இந்த மைதானம் அவர்களுக்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைவர் விஜய்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். 25 நாட்களுக்கு வாடகை அடிப்படையில் ஜி கார்னர் மைதானத்தை ஒதுக்கி தருமாறு ரயில்வே அதிகாரியிடம் கடிதம் ஒன்றை வழங்கினர். அதன் அடிப்படையில் இன்று(08-08-2024) ரயில்வே துறை அதிகாரி பாஸ்கர் தலைமையில் பொன்மலை ஜி கார்னரை அளவிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பொன்மலை ஜி கார்னர் வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜி கார்னர் மைதானம் மிகவும் ராசியானதாக அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக மாநாடும், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக மாநாடும் நடைபெற்றுள்ளன. மாநாடுகளுக்குப் பிறகு அரசியலில் வெற்றியும் கண்டுள்ளனர். அதேபோல கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் திருச்சியில் திமுக மாநாடுகள் நடைபெற்றன. இந்த மாநாடுகளுக்குப் பிறகு இரண்டு தேர்தல்களிலும் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த சக்சஸ் ஃபார்முலா வை விஜயும் கையில் எடுப்பார் என்றே தெரிகிறது.
Comments are closed.