திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த தோளூர்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவருக்கு சொந்தமான கடையை தொட்டியம் பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு மளிகை கடை வைப்பதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் முருகானந்தம் நடத்திவரும் மளிகை கடை முன்பாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இதில் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகள் எரிந்து நாசமானது. மேலும், கடை சுவரின் சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்த ஞானசேகரன் தீயை அணைத்து விட்டு இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் திருச்சி மாவட்ட ஏடிஎஸ்பி கோடிலிங்கம், தொட்டியம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில் 3 நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பிரச்சனை காரணமாக முருகானந்தம் மளிகை கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு காரணமாக வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Comments are closed.