கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு தேவிகா (வயது 16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 24ந்தேதி வீட்டில் இருந்த தேவிகாவை நள்ளிரவில் காணவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று( 26.05.2023 ) காலை தேவிகா ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அரங்கு முன்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது அவர்கள் தேவிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் போில் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.