Rock Fort Times
Online News

திண்டுக்கல் அருகே பரபரப்பு சம்பவம்: சப்- இன்ஸ்பெக்டரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுடப்பட்டார்…!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 55). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நிலக்கோட்டை அருகே என்.கோவில்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த ரவுடி ராஜா, அந்தப் பகுதியில் உள்ள ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு காவல் துறையினர் சிறப்பு தனி படையுடன், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் அவரைப் பிடிக்க என்.கோவில்பட்டி சென்றனர். போலீசாரை பார்த்ததும் ரவுடி ராஜா தப்பி ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் அவரை பிடிக்க முயன்றார். அப்போது அவரை ரவுடி ராஜா, அரிவாளால் வெட்டி உள்ளார். இதனால், பாதுகாப்பிற்காக ரவுடி ராஜா மீது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் காலுக்கு கீழே சுட்டார். இதில் கீழே விழுந்த அவரை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரவுடி ராஜாவால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து உதவி ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். ரவுடி சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்