தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இன்று(09-09-2026) நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். இக்கூட்டத்தில், கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு, ஒருங்கிணைப்புக் குழு என்பன குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்குப் பின்னர் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தாங்கள் தவெக தலைமையிலான ஆதரவு கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.