திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித் துறை மற்றும் உறையூர் சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து “சாம்பியன்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் ஊட்டச்சத்தை வளர்த்தல்” என்ற தலைப்பிலான விளையாட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் விரிவாக்கப் புல இணை முதன்மையர், இணைப் பேராசிரியர் மற்றும் சமூகப் பணித் துறை ஒருங்கிணைப்பாளர் எம். கேப்ரியல் தலைமை உரையாற்றினார். சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனை டாக்டர் ஆர். ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களிடையே ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு, போதுமான தூக்கம், புரதச்சத்து உட்கொள்ளுதல், முழங்கால் வலி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியின் போது பெண் விளையாட்டு வீராங்கனைகள், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் ஒழுங்கின்மை உள்ளிட்ட பல்வேறு உடல்நலம் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு டாக்டர் ஆர். ராஜ்குமார் விளக்கம் அளித்தார். முன்னதாக சிஎஸ்ஐ மிஷன் பொது மருத்துவமனையின் ஆலோசகரும், பி.ஆர்.ஓ.வுமான வி. ஆனி கிறிஸ்டபெல் வாழ்த்துரை வழங்கியதோடு விளையாட்டு மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சுவாரஸ்யமான விளையாட்டு ஒன்றை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டு மாணவர்கள் சுமார் 90 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சமூகப் பணித் துறையின் மூன்றாம் ஆண்டு இளங்கலை சமூகப் பணி மாணவர்கள் சமூகப் பணித் துறை உதவிப் பேராசிரியர் வி. ஜான்சி வில்லியம் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.