பொதுமக்களுக்கு போக்குவரத்தில் சிறந்த சேவையை வழங்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகமும், மின் வணிகத்துக்கான உந்துதலை அதிகரிக்கும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனமும் இணைந்து குறைந்த கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சி களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு “நம்ம யாத்ரி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், பெங்களூருவில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் வாடிக்கையாளர்களும், சென்னையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, திருச்சியில் மே 14ஆம் தேதி முதல் இதற்கான சேவையை தொடங்கியுள்ளன.

‘நம்ம யாத்ரி’ செயலி நிறுவனமும், உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம், சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து இந்த செயலியை திருச்சியில் அறிமுகம் செய்தன. இந்த செயலியை பொதுமக்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோ கட்டணமாக கி.மீ. ஒன்றுக்கு ரூ.15, கார் கட்டணமாக கி.மீ. ஒன்றுக்கு ரூ. 21 என வாகன இருக்கை வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அறிமுக நிகழ்ச்சியின் போது நிறுவனத்தின் மேலாளர் சதீஷ், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செயலர் சந்திரன், உரிமைக்குரல் ஓட்டுநர் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜாகிர் உசேன் மற்றும் வாகன ஓட்டுனர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.