நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா அன்னை தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சீபுரம் மாவட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 34) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இந்த ஆலயத்தில் சமீபத்தில் தான் திருவிழா நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் வழக்கம் போல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆரோக்கியதாஸ் பங்கேற்கவில்லை. இதனால், பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் ஆலய வளாக பின்புறம் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, ஆரோக்கியதாஸ் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . இதுகுறிதது வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கியதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆலயத்தில் கடந்த ஓராண்டாக ஆரோக்கியதாஸ் பணியாற்றி வந்தார். அவர் பணிமாறுதலாகி வேறொரு ஆலயததிற்கு செல்வதாக இருந்தது. அதற்குள் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக குருமார்கள் மற்றும் அருட் சகோதரிகள், பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.