Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு: விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைப்பு…* அமைச்சர் ரமேஷ்..!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி இருந்ததால் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று(மே 22) அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவிகள் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை.

மறியல் போராட்டம் 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவிகளிடமும், உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். சிகிச்சை அளித்ததன் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்படும். மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், அறுவை சிகிச்சை மேற்கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு கல்லூரியில் எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தக் கூடாது என நிர்வாகத்திடம் பேசி உள்ளோம். அப்படி ஏற்பட்டால் அவர்களை என்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்வோம் என தெரிவித்தார். சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்