தலைநகர் சென்னை உள்பட ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது. உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் அதிகாரிகளின் தவறுகளால் மின்சாரம் தடைபடுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. 99% சிறப்பாக செயல்படும் மின்சாரத் துறை ஊழியர்கள் மத்தியில் உள்ள 1% கருப்பு ஆடுகளை கண்டறிவோம். யாருடைய தூண்டுதலால் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அம்மாதிரியான நபர்கள் மேல் இன்று இரவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். சூரிய மின் உற்பத்தியில் பல இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறையில் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டியிருக்கிறார்கள். மின்தடைகளை சரி செய்ய 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். பீக் ஹவர்சில் உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பதால் மின்தடைகள் ஏற்படுகின்றன. மின்தடைகளை உடனுக்குடன் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.