Rock Fort Times
Online News

ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.37 லட்சத்துடன் பாதுகாவலர் “எஸ்கேப்”- 8 மணி நேரத்தில் சிக்கினார்…!

சென்னையில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியில் வேளச்சேரியில் உள்ள ஹிட்டாச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் (29) தலைமையில், மதுபிரசாத் (22), ஓட்டுநர் மகாலிங்கம் (24) மற்றும் இவர்களுடன் சென்ற தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர் குணசேகரன் (45) ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். இறுதியாக ஊரப்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப ராஜசேகர் மற்றும் மது பிரசாத் சென்றபோது ஓட்டுநர் தன் கைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை விட்டுவிட்டு சிறிது தூரம் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாதுகாவலர் குணசேகரன் ரூ.37 லட்சம் உள்ள ஒரு பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவானார். ஓட்டுநர் மகாலிங்கம் மற்றும் பணம் நிரப்பச் சென்ற ராஜசேகர் மற்றும் மது பிரகாஷ் வந்து பார்த்தபோது குணசேகரனை காணவில்லை.
இதனால், சந்தேகமடைந்த மூவரும் பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.37 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, திருவான்மியூர் பகுதியில் பதுங்கியிருந்த குணசேகரனை 8 மணி நேரத்தில், பணப்பையுடன் பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்