ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் இன்று மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குனரகம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, இந்திரா கணேசன் கல்வி குழுமம், திருச்சி மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே இருந்து துவங்கிய பேரணியை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார மையத்தின் இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி, இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் செயலாளர் ராஜசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பிய படியும் சென்றனர். முடிவில் ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் கோவிந்தராஜ் வர்த்தனன் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.