Rock Fort Times
Online News

மாநிலங்களவை உறுப்பினராகிறார், பிரவீன் சக்கரவர்த்தி…- சுயேட்சைகள் 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி…!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவை உறுப்பினருக்கான இந்த இடத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என்ற சூழல் உருவானது. ஆனால், ஆட்சியமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸிற்கு அந்த இடத்தை ஒதுக்குவதாக தவெகவின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் இருந்து அமைச்சரவையில் 2 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் காங்கிரஸிற்கு அளிக்கப்பட்டது. இப்பதவிக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு ஜூன் 1-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தவிர்த்து, இத்தேர்தலில் போட்டியிட 14 சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரீசீலனை இன்று( ஜூன் 9) நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். ஆனால், பிரவீன் சக்கரவர்த்தியை தவிர மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு கடிதம் இல்லை. இதன் காரணமாக 14 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. மேலும், பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இருந்த போதும் வருகின்ற 11ம் தேதி வரை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் உள்ள காரணத்தால், 11ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்