தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக டெல்லிக்கு நாளை (ஜுன் 10) பயணம் மேற்கொள்கிறார். கடந்த மே 10- ம் தேதி அன்று தமிழ்நாட்டின் 13- வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, முதன்முறையாக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக கடந்த மே 27-ம் தேதி டெல்லிக்கு சென்ற அவர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார். பின்னர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாளே சென்னை திரும்பினார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூன் 10) டெல்லிக்கு செல்கிறார். அவரது இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, நாளை மறுநாள் (ஜூன் 11) டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்திற்கு இடையே பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்துப் பேசுகிறார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நாளை காலை 8 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றடையும் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஜூன் 12- ம் தேதி மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்புகிறார்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.