மூன்று மாதத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி கவிழ்ந்து விடும் என முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியதாக தகவல் பரப்பப்பட்டு வரும் வேளையில், அதற்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்எல்ஏ-வுமான தங்கம் தென்னரசு இன்று (ஜூன் 9) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியை பார்த்தாலும், நாளிதழ்களை திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான தவெக நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்எல்ஏ மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கியுள்ளது தூய சக்தி என கபட வேடம் போடும் தவெக. இத்தகைய சூழலை மனதில் வைத்து தான் ‘இந்த ஆட்சியை மூன்று மாதம் கூட தாங்காது என்கிற நிலையில் தவெக ஆட்சி உள்ளது’ என திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என அவர் கூறியதாக திரித்து செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால், இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூக வலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளை தான் மக்கள் சொல்லி வருகிறார்கள். இதைதான் மு.க. ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.