14 பியூஸ் கேரியர்கள் திருட்டு: வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை…* அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே மின்வாரியத்தின் பெட்டியில் பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதால் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆவடியில் மின்வாரிய பெட்டியில் இருந்து 14 பியூஸ் கேரியர்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்குன்றம் அருகே திருடப்பட்ட பியூஸ் கேரியர்களை 1500 ரூபாய்க்கு அவர்கள் விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வாகன திருட்டு, இரும்பு திருட்டு போன்ற பல்வேறு திருட்டு புகார்கள் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், ”சிலர் வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துகின்றனர். மின்தடை ஏற்படுவது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு இடத்தில் பியூஸ் கேரியர்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் சிசிடிவி இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இரவு நேரங்களில் மின் விநியோகம் தொடர்பான குறைகளை சரி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று கூட மின்வாரிய குழுவினர் வட சென்னையில் ஆய்வில் ஈடுபட்டனர். வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ ‘என்றார்.

Comments are closed.